அரசு மருத்துவர்கள் ஊதியம்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

80பார்த்தது
அரசு மருத்துவர்கள் ஊதியம்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

திமுக அரசோ, வாக்குறுதியையும் நிறைவேற்றமாட்டோம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினையும் மதிக்கமாட்டோம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையையும் செயல்படுத்தமாட்டோம் என்ற மன ரீதியில் இறுமாப்புடன் செயல்பட்டு வருவதும், கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பதும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல்.

எனவே, அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதனை செயல்படுத்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி