தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் முத்துநகர், சதாப்தி, காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென், மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, காத்திருபோர் பட்டியல் அதிகமுள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 29-ம் தேதி முதல் நவ. 4-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.