*அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு பணிக்கு வருவதை ஒட்டி அவசர கதியில் சாலை நடுவே இருந்த மண் குவியல்களை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அருகே குவித்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள்*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலை மதுரை சாலை போன்ற சாலைகளில் அதிகளவு மண் தூசுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மண் தூசுகள் அனைத்தும் சாலை நடுவே செண்டர் மீடியன் ஓரமாக குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு மேற்கொள்ள வந்தார். அமைச்சர் ஆய்வுக்கு வரவுள்ளதை முன்னிட்டு பல வருடங்களாக அப்புறப்படுத்தாத அந்த மண் குவியல்களை நெடுஞ்சாலை துறையினர் அவசரகதியில் அள்ளி அப்புறப்படுத்தினர். அப்படி அகற்றப்பட்ட மண் குவியல்களை வேறு இடத்தில் சென்று கொட்டாமல் ஏற்கனவே மண் மூடி அடைபட்டு காணப்படும் கழிவுநீர் கால்வாய் அருகே கொட்டினர். இதனால் பகுதியில் மேலும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை எதிரே வளைந்து காணப்பட்ட ரெப்லெக்டர் இரும்பு பதாகையையும் கையாலேயே நிமிர்த்த முயற்சித்தனர்.