விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

1045பார்த்தது
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் இவர் கடந்த 19. 5. 2015 அன்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு அவர், வக்கீல் வேலவன் மூலமாக விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ராமானுஜத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 32, 950-ஐ வழங்குமாறு உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு வழங்காமல் காலம் தாழ்த்தியதால் 2022- ல் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பிரபாதாமஸ், பாதிக்கப்பட்ட ராமானுஜத்திற்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ. 59, 550-ஐ வழங்க வேண்டுமென்றும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 24. 3. 2024 அன்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு வழங்காததால் விழுப்புரத்தில் இருந்து கும்பகோணம் புறப்பட்ட அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவின்படி அதன் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர்புடைய செய்தி