இறைச்சிக்காக சிறுவன் பிடித்து வந்த 33 ஆமைகள் பறிமுதல்

2251பார்த்தது
இறைச்சிக்காக சிறுவன் பிடித்து வந்த 33 ஆமைகள் பறிமுதல்
விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பானாம்பட்டு சாலை பிரியும் பகுதி வழியாக இறைச்சிக்காக ஆமைகளை சிலர் கடத்தி செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வனத்துறையினர், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த சாக்குப்பையை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில் 33 ஆமைகள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த நபரை விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர், ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிந்தது, மேலும் விழுப்புரம் பகுதியில் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் 5 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களில் தங்கியிருந்து பூம்பூம் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருவதும், இவர்களில் 17 வயதுடைய சிறுவன், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து 33 ஆமைகளை பிடித்து வந்ததும் தெரியவந்தது,

இதையடுத்து அந்த ஆமைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அச்சிறுவனை, விழுப்புரம் இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி