திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினத்தன்று, கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், ஐப்பசி மாத பிரதோஷ தினமான நேற்று புதன்கிழமை பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, பெரிய நந்தி பகவானுக்கு அறுகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற ஐப்பசி மாத பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.