திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சிப்பேட்டை அருகில் உள்ள கருவேலக்காட்டில் மர்மமான முறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் கடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், காஞ்சிப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி வந்தவர் என்பதும், அவரது பெயர் முனியம்மாள் (45) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு மேற்கண்ட காஞ்சிப்பகுதியில் சுற்றி வந்து, காலி மதுப்பாட்டில்களை சேகரித்து விற்று பிழைத்து வந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, முனியம்மாளுடன் வாலிபர் ஒருவர் பேசிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அவரை பற்றி விசாரித்த போது அவர் செங்கம் அடுத்த ஈடுகாத்தான்கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு (32) என்பதும், கூலித்தொழிலாளியான அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கலசப்பாக்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், முனியம்மாளை அடித்துக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கலசப்பாக்கம் போலீசார் ராஜவேலுவை கைது செய்து மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.