திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை புதிய மாவட்டம் பழனியில் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் சாலையில் உள்ள உடுமலை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது பழனி மாவட்டத்துடன் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை பழனி என்ற புதிய மாவட்டம் உருவாகும்போது இணைக்கக் கூடாது.
உடுமலையை தலைமையிடமாகக் கொண்டு கோவை மண்டலத்தில் உள்ள வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியை உள்ளடக்கிய உடுமலை மாவட்டம் உருவாக்க வேண்டும், கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது, அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பது, கடையடைப்பு பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.