அ. தி. மு. க. கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அ. தி. மு. க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம். எல். ஏ. நேற்று, கவுன்சிலர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, திருப்பூர் மாநகரில் தி. மு. க. ஆட்சிக்கு வந்த பின், 3 முறை சொத்துவரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்போது கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை மறு ஆய்வு செய்து மேலும் பலமடங்கு வரியை உயர்த்துவதை கண்டிக்கும் வகையில் ஜனநாயக முறையில் அ. தி. மு. க. மாநகராட்சி கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் வரி உயர்வு கூடாது என்று போராடியவர்களை போலீசை விட்டு குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி இங்கு அடைத்து வைத்துள்ளனர்.
அ. தி. மு. க. கவுன்சிலர்களை சஸ்பெண்டு செய்தாலும் அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள். வரியை உயர்த்திவிட்டு மேயர், மத்திய அரசை காரணம் சொல்கிறார். நிச்சயமாக தி. மு. க. அழிவுப்பாதையை நோக்கி ராக்கெட் வேகத்தில் போய்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களும் வேதனையுடன் இருக்கிறார்கள். வீட்டை விற்று வீட்டுவரி கட்டுவதா, தொழில் நிறுவனத்தை விற்று தொழில்வரி கட்டுவதா என்று திருப்பூர் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். விரைவில் அ. தி. மு. க. பொதுச்செயலாளரிடம் அனுமதி பெற்று வருகிற 2-ம் தேதி அல்லது 3-ம் தேதி திருப்பூர் மாநகராட்சி முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.