காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் கடந்த 2 ம் தேதி தொடங்கியது. சுவாமி மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். தினசரி காலையில் அபிஷேக ஆராதனையும் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளில் நடந்த போரில் சூரனை, சுப்ரமணிய சுவாமி வதம் செய்தார். நேற்று காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இரவு 7: 50 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் நான்கு வீதிகளில் திருவுலாக்காட்சி நடைபெற்றது. இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர் சஷ்டி விரம் கடைபிடித்தவர்கள், சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். விழா நிகழ்சிகள் நிறைவு பெறுவதையொட்டி சுவாமி திருமலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்வில் 10, 000 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் காங்கேயம் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.