துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக எரகுடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் தெரு, மேலவீதி, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுடன் காட்சியளிக்கிறது. இதனால் இந்த தெருக்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள், முதியோர்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு சாலைகள் சேறும் சகதியுடன் காட்சியளிப்பதால், பலமுறை புகார் அளித்தும் நிறைவேற்றாத அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சாலைகளில் தேங்கியுள்ள சேற்றில் நாற்று நட்டு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எரகுடி கிராமத்தில் பரபரப்பு நிலவியது.