ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு தமிழக கிளைத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பி. ஆா். பாண்டியன் முன்னிலை வகித்தாா். இக்கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஹரியானா, பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், தலைவா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
பின்னா், இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து, கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி நிகழ்வில் பங்கேற்க வந்த தேசியத் தலைவா்களை இங்கு வரவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீா் வரை விவசாயிகள் எங்கும் செல்லலாம், போராடலாம் என உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து நசுக்கி வருகிறது.
தில்லி நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டம் கடந்த பிப்ரவரி தொடங்கி 196 நாள்களைக் கடந்து இன்றளவும் தொடா்ந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, ஆகஸ்ட் 31-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் ஆா்ப்பாட்டம், செப். 1-ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறுகிறது. மேலும், செப். 15-ஆம் தேதி ஹரியானாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறுகிறது என்றனா்.