திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 30 மற்றும் 31 அடி உயரமுள்ள மிகப்பெரிய இரண்டு தேரையும் பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். ஓலைப்பிடாரியம்மன், மதுரை காளியம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு வாணப்பட்டரை மைதானத்தில் இந்த இரண்டு திருத்தேர்களும் வந்தடைந்தது. அப்போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக வாண வேடிக்கையை கண்டுகளித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம், மற்றும் ஏடிஎஸ்பிக்கள் கோபால சந்திரன், கிருஷ்ணன் மற்றும் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.