திருச்சி ஈ.பி. ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என உத்தரவு பெற்றுள்ளார். அந்த உத்தரவில் 20 ஆண்டுகால காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை.
இந்நிலையில் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் போலீசார் பாதுகாப்புடன் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி லோடு ஏற்றுவதைக் கண்டித்தும் இங்கு பல ஆண்டுகாலமாக வேலை செய்து வரும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட வந்த சுமைப்பணி தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தைக் கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.