தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சுனாமி நினைவு தினத்திற்குப் பின்பு கடந்த 27-ந்தேதி ஆழ்கடலுக்கு ஏராளமான நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
வழக்கமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்லும் மீனவர்கள் சனிக்கிழமைகளில் கரைக்குத் திரும்புவது வழக்கம். ஆனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 2 நாட்களே ஆனதால், பெரும்பாலான மீனவர்கள் கரைத் திரும்பாத நிலையில் குறைவான மீனவர்களே கரைக்குத் திரும்பினர். இதன் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்டது. ஆனால் பள்ளி விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் நேற்று சீலா மீன் ஒரு கிலோ ரூ. ஆயிரம் வரையும், விளை மீன், பாறை மீன், ஊளி மீன், கடவுளா ஆகிய மீன்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 600 வரையும், நண்டு கிலோ ரூ. 400 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2 ஆயிரம் வரையும், மயில் மற்றும் ஐலேஸ் ஆகிய மீன்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 250 வரையும் விற்பனையானது. வருகிற புத்தாண்டுக்கு முந்திய நாளில் ஏராளமான நாட்டுப்படகுகள் கரைத் திரும்பும், அப்போழுது மீன்கள் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.