ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவ மக்கள் வீடுகளின் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். வீடுகள் மட்டுமின்றி, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்தும், விதவிதமான மலர் அலங்காரங்களையும் செய்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் விற்பனைக்காக கடைகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு காகிதத்தால் ஆன நட்சத்திரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விதவிதமான நட்சத்திரங்கள், டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து போன்று தொங்கும் நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. ரூ. 150 முதல் ரூ. 950 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நட்சத்திரங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் பைபரால் தயாரிக்கப்பட்ட நட்சத்திரங்களை மக்கள் வாங்குகின்றனர்.