தூத்துக்குடி சிஎஸ்ஐ சர்ச்சில் இரு தரப்பினர் இடையே மோதலில் 3பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான சண்முகபுரம் சிஎஸ்ஐ பீட்டர்ஸ் சர்ச்சில் தூத்துக்குடி சபைமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டம் முடிவடையும் நேரத்தில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தில் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுந்தர் ராஜ் மகன் பவுல் ஜெபசிங் (32), மற்றொரு தரப்பைச் சேர்ந்த எஸ்பிஜி கோவில் தெரு ஜெக ரத்தினம் மகன் திவான் நிர்மல் (39), எஸ்தர் ராஜ் (50) ஆகிய 3 வரும் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தென்பாகம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண்டல நிர்வாகத்தில் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருவதால் சிஎஸ்ஐ கிறிஸ்தவ மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.