தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் செம்மண் பரப்பு கொண்ட தேரி பகுதிகளை சுற்றுலா தளமாக திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடல் சாகச விளையாட்டு மையம் அமையும் கடற்கரைப் பகுதியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இன்று (டிசம்பர் 20) ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கடல் சாகச விளையாட்டு அமையும் மாதிரி வரைபடம் காட்டி அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த கோவளம் கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் நீர் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தும் மையம் அமைக்கப்படவுள்ளது என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வு மையங்களையும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் செம்மண் பரப்பளவு கொண்ட தேரி பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.