தானியங்கி ரயில்வே கேட் பாதை திடீர் அகற்றம்

80பார்த்தது
தானியங்கி ரயில்வே கேட் பாதை திடீர் அகற்றம்
திருத்தணி நகராட்சி ஜோதிசாமி தெருவில் இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக திருத்தணி நகர மக்கள் மற்றும், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகள் காரணமாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பஜாருக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இதே கேட் வழியாக திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் பஜாரில் இருந்து அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே நிர்வாகம் முன் அறிவிப்பின்றி தானியங்கி ரயில்வேகேட் பாதை தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த கேட் வழியாக செல்லும் ரயில்களின் வேகம் அதிகரித்து உள்ளதால், அதற்கு ஏற்றவாறு தார்ச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக தான் ரயில்வே கேட் பாதை தோண்டப்பட்டது. இப்பணிகள் முடிய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என, ரயில்வே நிர்வாகம் முன்கூட்டியே அறிவிக்காமல் தோண்டிய பின் அறிவிக்கிறது.

இதனால், தானியங்கி ரயில்வே கேட்டை பொதுமக்கள், பூ மார்க்கெட்டிற்கு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள், மேட்டுத் தெரு ரயில்வே கேட் வழியாக ஒரே நேரத்தில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.