திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளங்குடி ஊராட்சியில் கடந்த சில தினங்களாக குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் தெருவிற்கு செல்லும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரிவர பராமரிக்கப்படாமல் சுகாதாரக் கேடான தண்ணீர் வந்தது என்றும் கடந்த சில தினங்களாக குடிநீர் சுத்தமாக வரவில்லை என்றும் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் விளங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருநீலக்குடி போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்தார். பின்னர் ஊராட்சி பொது நிதியிலிருந்து உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகளை செய்ய உத்திரவிட்டார். உங்கள் பிரச்சனைகள் உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.