தஞ்சையில் இருந்து அரவைக்காக ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு தலா ஆயிரம் மெ. டன் நெல் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும்.
இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று (3ம் தேதி) தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் மெ. டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 42 வேகன்களில் தலா ஆயிரம் மெ. டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அர வைக்காக ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.