மல்லிப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு

78பார்த்தது
மல்லிப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கண்ணாடியிழை படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பலியானார்.  

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் முத்துவாப்பா என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழை படகில் மல்லிப்பட்டினம் பழனிவேல் (48), விஜய் (28), அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் அரவிந்த் (22) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் நான்கு பாகம் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென கடலில் சூறைக்காற்று வீசியது.  

இதில், படகின் என்ஜின் அருகே நின்று கொண்டிருந்த அரவிந்த் மற்றும் விஜய் இருவரும்  தவறிக் கடலுக்குள் விழுந்தனர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் உள்ள மீனவர்கள் விரைந்து வந்து கடலுக்குள் இருந்து விஜய்யை மட்டும் மீட்டனர். அரவிந்தை  தேடியும் கிடைக்கவில்லை.  

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மாலை புதுப்பட்டினம் கடல் பகுதியில் அரவிந்த் சடலம் கண்டு பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த அரவிந்துக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி