தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -
தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன மரக் கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைக்க வேண்டும்.
தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காதவாறு தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். காய்கறி பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்ய வேண் டும். டிரைக்கோடர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துக்களை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். மழை அதிக பொழிவு உள்ள நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
வாழைத் தோட்டங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். வாழைத் தார்களை முறையாக மூடிவைக்க வேண்டும். 75சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.