தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மிதந்து வரும் கரும்பு பாசி மீனவர்கள் வலையில் சிக்கிக் கொள்வதால் மீன்பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் மீன்வரத்து குறைவாகிறது.
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு திசையிலிருந்து அதிவேக காற்று வீசுகிறது. இதனால் கடல்நீரோட்டத்தில் நீரில் உள்ள தாவரங்களான கடல்பாசி, கரும்பு பாசி உள்ளிட்ட தாவரங்கள் அலைகள் சீற்றத்தால் அறுந்து கொண்டு கடல் துறைமுகப்பகுதியில் மிதந்து வருகிறது.
இந்த பாசிகள் மீனவர்களின் வலையில் சிக்கிக் கொள்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் மீன்கள் அதிகளவில் சிக்குவதில்லை. இது குறித்து ஏரிப்புறக்கரை மீளவர்கள் கூறியதாவது:
கடலுக்கு அடியில் பவளப்பாறைகள் உள்ளதால் பாசிகள் புல்கள் என பல வகையான தாவரக்கூட்டங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் கரும்பு பாசி அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடலில் பலத்த காற்று வீசுவதால் கடல் பாசிகள் அலைகளின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பாசிகள் அறுந்து கொண்டு கடல் ஓரங்களில் பசுமையாக படித்துள்ளது. இதையடுத்து கரும்பு பாசி கடல் முழுவதும் மிதந்து வருவதால் கடலில் மீன்களுக்காக விரிக்கும் வலையில் கரும்பு பாசிகள் சிக்கி வலையின் துவாரங்களை அடைத்து விடுகிறது. இதனால் மீன்கள் சிக்குவது அரிதாகி விடுகிறது"என்றார்.