தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மிதமாகவும், இடையிடையே பலத்த மழையும் பெய்தது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் பெய்த மழை நீா் வடிந்து செல்வதற்கு எளிதாக இருந்தது.
தாழ்வான மற்றும் வடிகால் பிரச்னையுள்ள பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்தது. அம்மாப்பேட்டை, புத்தூா், அருந்தவபுரம், கம்பா் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு உட்பட்ட இளம் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம், குலமங்கலம், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 1, 500 ஏக்கரில் சம்பா, தாளடி நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
பெரும்பாலும் வடிகால் பிரச்னை காரணமாகவே வயல்களில் தண்ணீா் வடிந்து செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.