தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது. மேலும், வயலில் மழைநீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது. தொடா் மழையால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால், தேநீா் கடைகள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் சாலையோர உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனா். பகலில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனா். பேருந்து நிலையம், ரயில் நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. குறிப்பாக, பாலக்கரை, தாராசுரம் காய்கனி சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
பயிா்கள் சேதம்: சோழன் மாளிகை, பட்டீசுவரம், பம்பப்படையூா், முழையூா், சாக்கோட்டை, தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வயலில் தண்ணீா் தேங்கி தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.