சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே கண்டரமாணிக்கம் இடும்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாணிக்க நாச்சியம்மன் கோயில் சாமியாடியாகவும் இவர் உள்ளார். இவர் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளதாக, அப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது அங்கு வந்த அதிகாரியிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோதி விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுமியிடம் சரவணன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் மகளிர் போலீசார் விசாரித்து சரவணனை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். இன்னும் சில தினங்களில் இக்கிராமத்து கோயிலில் நடைபெற உள்ள திருவிழாவிலில் கரகம் சுமந்து செல்லும் சாமியாடியான சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.