சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள மிளகனூர் ஊராட்சியில் மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் கடந்த 2020-21 ஆம் ஆண்டு செயல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு 4.43 லட்சம் திட்ட மதிப்பில் போர்வெல்லுடன் கூடிய குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதன் பின் அதே இடத்தில் அந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
உரிய திட்டமிடல் இல்லாமல் ரூ.4.43 லட்சம் நிதியை அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது அதே ஊராட்சியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் மாவட்ட திட்ட இயக்குனரிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனுவை கொடுத்துள்ளார். புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டி ஒரு வருடத்திற்குள்ளாகவே இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.