ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் காபி மலர்கள்

55பார்த்தது
ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் காபி மலர்கள்
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் முக்கிய விவசாய பொருட்களாக காபி, மிளகு கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டுக்கு 2 முறை காபி விளைச்சல் ஏற்படும். பெரும்பாலான எஸ்டேட் உரிமையாளர்களும், சிறு, குறு தோட்ட விவசாயிகளும் காபி விளைச்சலை எதிர்பார்த்து வருவது வழக்கம். 

இந்த நிலையில் தற்போது ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாக காபி செடிகளில் பூ பூத்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்ததன் காரணமாக மட்டுமே பூ பூத்துள்ளது. மீண்டும் பூ பூத்ததில் இருந்து 20 முதல் 30 நாட்களுக்குள் மழை பெய்தால் மட்டுமே காபி கொட்டையின் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். 

சரியான நேரத்தில் பருவ மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரித்து காணப்படும் எனவும், பருவ மழை பெய்திட தினமும் கடவுளை வேண்டிக் கொள்வதாகவும் விவசாயிகள் கூறினர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான நேரத்தில் பருவமழை பெய்ததே இல்லை. இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்ததால் பூக்கள் பூத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் காபி தோட்டங்களில் பூத்துகுலுங்கும் பூக்கள், மல்லிகை பூக்களை போன்று வெண்மை நிறத்தில் அழகாக காட்சி அளிப்பதை கண்டு ரசிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி