சேலம் மாநகரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் வீராணம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 10 ஆவது வார்டுக்கு உட்பட்ட கனவீரப்பன் கோயில் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீரை பணம் கொடுத்து வாங்குவதாகவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி பெண்கள், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை விரைந்து சரி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொன்னம்மாபேட்டையில் இருந்து வீராணம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்து சம்பவிடத்திற்க்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி நிர்வாகம் மூலம் விரைந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.