வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் தென்னிந்திய சிறை அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு சிறை அதிகாரிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயிற்சி மைய பேராசிரியர் மதன்ராஜ் தலைமையில் கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 பேர் நேற்று சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் சிறையில் உள்ள தொழிற்கூடம், சமையல் கூடம், ஆஸ்பத்திரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
குறிப்பாக அவர்கள் சிறைபண்பலையில் கைதிகள் எவ்வாறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள்? என்பதை பார்வையிட்டனர். மேலும் நூலகத்தின் புத்தகத்தை படித்து கைதிகளால் நடத்தப்படும் வாசகர் வட்டத்தை பார்த்தனர். இதுதவிர கைதிகளால் நடத்தப்படும் சிறைச்சாரல் இன்னிசைக்குழுவில் கைதிகள் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தனர்.
அப்போது பயிற்சி சிறை அதிகாரிகளும் பாடினர். அதைத்தொடர்ந்து கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் காரவகைகளை அவர்கள் சாப்பிட்டு தரம் பார்த்தனர். அப்போது சிறை கண்காணிப்பாளர் வினோத், சிறை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.