சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் மணக்காடு சமுதாய கூடத்தில் நடந்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை தாங்கினார். இதில், அஸ்தம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி கலந்து கொண்டு பேசியதாவது: -
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஏதாவது இடத்தில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
அஸ்தம்பட்டியில் ரவுடிகள் திருந்துவதற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் அவர்கள் திருந்தாத காரணத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய இளைஞர்கள் மது, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களை மீட்க வேண்டும். அஸ்தம்பட்டி சரகத்தில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்து நடைபெறாமல் தவிர்க்கலாம்.
மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை மதித்து கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.