ஓமலூர் அடுத்த தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 25). இவரது பெயர் ஓமலூர் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. இவர் கடந்த சட்டசபை, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல் என 5 தேர்தல்களில் தாராபுரம் வாக்குச்சாவடி வாக்களித்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திலிருந்து மணிவண்ணனுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், ஓமலூர் சட்டசபை தொகுதி மட்டுமின்றி கடலூர் மாவட்டம் பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, சென்னை ஆர். கே. நகர், ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் என 7 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் மணிவண்ணன் பெயர் உள்ளது எனவும், தேர்தல் ஆணைகளின் படி உங்களது பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளது.
மேலும் பதிவாகியுள்ள தொகுதிகளின் விவரங்கள் இணைக்கப்பட்டு தற்போதைய முகவரியில் உள்ள விவரங்களை மட்டும் ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
இதை படித்து மணிவண்ணன் தனக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த தேர்தல் பணி அதிகாரியிடம் முறையிட்டார்.
அப்போது 7 தொகுதிகளில் உங்கள் பெயர் உள்ளது எனவும், அதனால் உங்கள் தொகுதியை உறுதிப்படுத்தவே கடிதம் அனுப்பப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.