சேலம் மாவட்டம் மேச்சேரியில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மேச்சேரி, கொளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை கூடியது. தீபாவளி பண்டிகையொட்டி சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
கடந்த வாரத்தை காட்டிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
இதனால் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ. 11 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ. 12 ஆயிரம் முதல் 12, 500 வரை விற்பனையானது. சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.