சேலம் மாவட்டம் தேவூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தேவூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதிகளாக உள்ளன. இந்த போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து சிமெண்ட் கற்கள் விழுந்தன.
கழிப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்டவற்றுக்கு போதிய இடவசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே வேறு இடத்தில் போலீஸ் நிலையம் கட்ட வேண்டிய தேவை எழுந்தது. இதையடுத்து தேவூர் அம்மாபாளையம் பகுதியில் புதிதாக ரூ. 1 கோடி 4 லட்சத்தில் 3,200 சதுரஅடி பரப்பில் 3 அடுக்கு கட்டிடத்தில் போலீஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு தீபா கணிக்கர் தலைமை தாங்கி போலீஸ் நிலைய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளாக நடந்து வந்த போலீஸ் நிலைய கட்டுமான பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே போலீஸ் நிலையத்துக்கு திறப்பு விழா நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.