சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் முட்டல் கிராமம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் தனது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்ததுடன், வறண்டு காணப்பட்டு வந்தது.
கடந்த மூன்று நாட்களாக ஆத்தூர், கல்வராயன் மலை பகுதியிலும் விடிய, விடிய பெய்த கனமழையால் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்பரித்து கொட்டி வருகிறது.
இதன் காரணமாக, ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்யராஜ்சேவியர், சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்படும் முட்டல் ஏரி, பூங்கா மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி ஆகிய அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என அறிவித்துள்ளார்.