ராமேசுவரத்தில் 570 மதுபுட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது.!

1095பார்த்தது
ராமேசுவரத்தில் 570 மதுபுட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மதுபானக் கடை திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரத்தில் 300-க்கும் மேற்பட்டோா் சட்ட விரோதமாக மதுபுட்டிகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனா். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷூக்கு புகாா்கள் வந்தன.

இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் நல்லுசாமி தலைமையிலான போலீஸாா் ராமேசுவரத்துக்கு வரும் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமாக மீன் பெட்டியை கொண்டு வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அந்த பெட்டியில் ரூ. 1. 5 லட்சம் மதிப்பிலான 570 மதுபுட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது அவா் பெயா் முத்துராமலிங்கம் என்பதும், மதுபுட்டிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக குமரகுரு, சாரதி, சாத்தக்கோன் ஊராட்சியில் உள்ள மதுபானக் கடை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

தொடர்புடைய செய்தி