புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் தலைவியாக ரகமத்துன்னிஷா என்கிற நிஷாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால் எம். பி. நியமனம் செய்ததை கண்டித்தும், அவரை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் ரத்னா தலைமையில் மகளிர் அணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அது இரவு வரை நீடித்தது. தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் எண்ணங்களை கட்சி தலைமைக்கு புதுவை மாநில தலைவர் வைத்திலிங்கம் எம். பி. கடிதம் எழுதியுள்ளார். நானும் இது குறித்து பேசுகிறேன் என்றார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.