
ஊட்டி: மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நீலகிரி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 48,597 மதிப்பில் திறன் பேசிகளும், ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 34,200 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், பதினைந்து பயனாளிகளுக்கு ரூ. 49,275 மதிப்பில் காது ஒலி கருவிகளும், நான்கு பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மொத்தமாக 27 பயனாளிகளுக்கு ரூ. 1.32 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகள் மூலம் பல்வேறு கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் விண்ணப்பித்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.