இராசிபுரம்: கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

82பார்த்தது
இராசிபுரம்: கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு
ராசிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சிகளை, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 6 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன், 5 ஊராட்சிகள் பிள்ளாநல்லூா் பேரூராட்சியுடனும் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிலரும், கிராம ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த தலைவா் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் கே. பி. ஜெகநாதன் தலைமையில் ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களும் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 4 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கிராம ஊராட்சிகளை இணைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதனைத் தொடா்ந்து மனுவுடன் அங்கு திரண்டு வந்த கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் இணைப்பிற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினா். கிராம ஊராட்சிகள் இணைப்பு நடவடிக்கை கைவிட வேண்டும் என கோரிக்கை என கோரிக்கை மனு வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி