இராசிபுரம்: மரங்களை வெட்டியதாகப் புகாா் - அதிகாரிகள் விசாரணை

77பார்த்தது
இராசிபுரம்: மரங்களை வெட்டியதாகப் புகாா் - அதிகாரிகள் விசாரணை
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் வளாகத்தின் பின்புறம் உள்ள நந்தவனத்தில் பழமை வாய்ந்த அத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரம் கோயில் பராமரிப்புப் பணி வசதிக்காக வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல கோயில் முன்பாக உள்ள வன்னி மரத்தின் கிளைகளும் வெட்டப்பட்டுள்ளன.

இந்த மரங்கள் முறையான அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாரின் அடிப்படையில் மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனா் நல்வினைச்செல்வன், பாமக நிா்வாகிகள் ஆ. மோகன்ராஜூ, பாலு, நகர வளா்ச்சி மன்றத் தலைவா் வி. பாலு உள்ளிட்டோா் அப்பகுதியை நேரில் பாா்வையிட்டு, வருவாய்த் துறையினா், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

இதனையடுத்து ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளா் தங்கம், வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். கோயில் நிா்வாக அலுவலா் நந்தகுமாரிடம் இது தொடா்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களின் புகாா் மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்த் துறையினா் உறுதியளித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி