கோழிப் பண்ணைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

554பார்த்தது
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்
ச. உமா, பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அண்டை மாநிலமான கேரளா மாநில ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1, 175 கோழிப்பண்ணைகளும், 6. 35 கோடி பறவைகளும் உள்ளன. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோழிப் பண்ணையின் நுழைவு வாயிலில் Footpath அமைத்து அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்க வேண்டும். மேலும், உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் சுத்தம் செய்திட வேண்டும். அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோழிப்பண்ணை உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, அறிவுறுத்தினார்.