நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கடைமடை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் இருப்பு குறித்து பொதுப்பணித்துறை நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் பார்வையிட்டு இன்று(செப்.17) ஆய்வு மேற்கொண்டார்.
இதில் குத்தாலம் தெற்கு புத்தாறு இயக்கு அணை, திட்டச்சேரி வடக்கு புத்தாறு இயக்கு அணை, முடிகொண்டான் ஆறு துண்டம் இயக்கு அணை, திருமலைராஜன் ஆறு மானாம்பேட்டை இயக்கு அணை, அரசலாறு அம்பல் இயக்கு அணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து குறித்தும், எந்தப்பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தேவை என்பது குறித்தும் விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது கடைமடை பகுதிகளில் தண்ணீர் வரத்து குறித்தும், பாசனத்திற்கு நீர் தேவைப்படும் பகுதிகள் குறித்தும் விவசாயிகள், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியனிடம் தெரிவித்தனர்.
பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக வடவேர், ஸ்ரீவாஞ்சியம், மாப்பிள்ளைகுப்பம், ஆண்டிபந்தல், வடகரை, கோட்டூர், தென்னமரக்குடி, மருங்கூர், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இயக்கு அணைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.