மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கிரிவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக ஆக்கிரமிப்பு கிரிவலப் பாதை மற்றும் சுற்றுப்பகுதிகளில் எடுத்து வந்த நிலையில் இன்று (அக். 19) சன்னதி தெருவில் உள்ள திருப்பரங்குன்றம் நுழைவாயில் உள்ள கல்யாண விநாயகர் திருக்கோவிலை அகற்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முற்பட்டனர்.
அப்போது கல்யாண விநாயகர் கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் இந்து முன்னணி பாஜக மற்றும் ஹனுமன் சேனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெகுநேரம் காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக எடுத்துக் கூறியும் அங்கிருந்து செல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏழுக்கும் மேற்பட்ட பாஜக, இந்து முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதையும் அகற்றினார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.