மதுரை அவனியாபுரம் அய்வேத்தனேந்தல் கிராம குடிமக்களான சுமார் 5, 000 மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது இவர்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வமான ஸ்ரீ ஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் மற்றும் சின்ன அய்யனார் ஆலயங்களில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவிற்காக கடந்த மூன்றாம் தேதி காப்பு கட்டுகளுடன் கோவில் திருவிழா தொடங்கியது. நேற்று அவனியாபுரம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆதி அய்யனார் ஆலயத்திற்கு குடமுழக்குக்காக கும்பம் எடுத்து செல்லப்பட்டது. இன்று ஸ்ரீ ஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் மற்றும் சின்ன அய்யனார் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சின்ன அய்யனார் மற்றும் பெரிய அய்யனார் கோவில்களில் கருவறையில் உள்ள அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள ஆண்டிச்சாமி, அக்கினி வீரபத்திரன், பெரியகருப்புசாமி, முத்துகருப்புசாமி, வேடச்சாமி, இராக்காயி, பேச்சி, ஆஞ்சநேயர், சோனிச்சாமி, உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு இதில் சுமார் 5, 000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஸ்ரீ நல்லூருடைய ஆதி அய்யனாரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.