மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 23 மற்றும் 24 ஆவது வார்டு பகுதிகளில் தெருக்களிலும் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளதோடு, பள்ளிகளுக்கு முன்பாகவும் கழிவுநீர் கடும் துர்நாற்றத்துடன் தேங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
மேலும் அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்லக்கூடிய பகுதிகளிலே முகாம்கள் நடத்தப்பட்டன. கழிவுநீர் தேங்கியிருப்பதால் தூய்மை பணியாளர்களும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் கடும் துர்நாற்ற பகுதியாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த மணவாளனநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செல்லூர் தத்தனேரி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதேநேரத்தில் செல்லூர் போஸ்வீதி உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குலமங்கலம் பிரதான சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் மதுரை செல்லூர் பகுதியை சுற்றிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து செல்ல முடியாத நிலை உருவானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக கழிவுநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.