மதுரை மாநகர் பகுதியில் கடந்த 25ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மதுரையின் ஆத்திகுளம், காந்திபுரம் , மகாலட்சுமி நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்மாயிலிருந்து நிரம்பிய மழை நீரானது குடியிருப்பு பகுதிகளுக்குள் மூழ்கி 4 நாட்களுக்கு பின்பாக மழை நீர் வெளியேற்றப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்ட நிலையில் கழிவுநீர் மழை நீரோடு தேங்கி குடியிருப்புகளுக்குள் தேங்கி இருந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் மதுரையில் அரை மணி நேரம் பெய்த கனமழை காரணமாக காந்திபுரம், மகாலட்சுமி நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுபோன்று குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தீபாவளி கொண்டாட முடியாத அளவிற்கான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு முறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்காது எனவும் குற்றம் சாட்டினர்.