கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவை சேர்ந்த ஷாஜி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எங்கள் வீட்டில் கழிவறைக்கான செப்டிக் டேங்க் அமைக்க முடிவு செய்து, வீட்டின் அருகில் குழி தோண்டினோம். தகவல் அறிந்த விஏஓ, நாங்கள் சட்டவிரோதமாக பாறையை வெட்டி கற்களை கடத்துவதாக போலீசில் புகார் அளித்தார்.
விஏஓ தந்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தாமல் என் மீது கனிம வள திருட்டு சட்டப்படி வழக்கு பதிவு செய்தார்கள். விசாரிக்காமல் கனிம வள திருட்டு என வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம். கனிம வளம் திருட்டு என்று என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், ”இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மார்த்தாண்டம் போலீசில் 2022 முதல் 2024 வரை கனிமவள திருட்டு பற்றி எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?. பதியப்பட்ட வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம், ” என தெரிவித்தனர்.