தஞ்சாவூர் மாவட்ட கல்வித் துறையில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தில் கடந்த 2016- 2017 ஆண்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 2027-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி குணசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே. கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 'தமிழகத்தில் 2004 முதல் 2024 வரையிலான 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5557 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 3035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1059 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும், 574 வழக்குகளில் தீர்ப்பாய ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 'குற்றவியல் நீதி பரிபாலன முறை சிறப்பாக இயங்க அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க வேண்டும். இதனால் உள்துறை முதன்மை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்.
அவர் தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ளது? இந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வழக்கறிஞருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.