மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ. 27) மனு அளித்தனர். அதில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலையப்பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர்களுக்கான தனியாக மயானம் இல்லாததால், இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மஞ்சமலை ஆற்றுப்பகுதியில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக செல்லும்போது மழை காலங்களில் தண்ணீர் வருவதால், இறந்தவர்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. புதைக்கவும் முடியாமல், பல நேரங்களில் இறந்தவரின் உடலை மஞ்சமலை ஆற்றின் கரையோரம் புதைக்கவும் எரிக்கவும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே வாடிப்பட்டி வட்டாட்சியர், ஆட்சியர் விரைந்து முடிவெடுத்து மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.